வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 203 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்த நிலையில், இந்த மாதம் 203 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் ரூபாய் 1,695 ரூபாய்க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது 1,898 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ. 203 கூடுதலாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள், தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், முறைப்படுத்தப்படாத GST, பணமதிப்பு நீக்கம், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்சனைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. இந்த விலையேற்றத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.