
அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'டவ்-தே' புயலாக உருவானது. இந்தப் புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அமினி தீவுக்கு (லட்சத்தீவு) அருகே 120 கி.மீ. தொலைவிலும், கண்ணூருக்கு (கேரளா) அருகே 300 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மே 18ஆம் தேதி காலைக்குள் குஜராத் கடற்கரைப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணாமாக, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பெய்துவரும் மழையால் மா, வாழை மரங்கள் சேதமடைந்தன. குறிப்பாக, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூங்கிலடி செல்லும் தரைப்பாலமும் மழை காரணமாக முற்றிலும் உடைந்தது.
இந்நிலையில், 'டவ்-தே' புயலை எதிர்கொள்வது பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, வருவாய் பேரிடர் - மேலாண்மை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.