வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது சென்னையிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரகம், ‘சென்னையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மிக்ஜாம் புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம். ஒருவேளை வெளியே பயணிக்க வேண்டியிருந்தால் பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.
இடி, புயலின்போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மின்கம்பம், கம்பிகள், உலோக பொருட்கள் மற்றும் மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். கீழே விழுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொட வேண்டாம்; அதன் அருகில் செல்ல வேண்டாம். பொதுமக்கள் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் ஓட்ட வேண்டும். மேலும், பிரேக்குகளை சரி பார்த்து பயன்படுத்த வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனங்களை ஓட்ட வேண்டாம். வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்; மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும். அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண் 100ஐ அழைக்க வேண்டும். மேலும், இந்த புயல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்று அறிவுறுத்தியுள்ளது.