நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் இரவு 9 மணி வரை பார்சல் வழங்கலாம். சென்னை மாநகராட்சியில் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கலாம். கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் தொழிலாளர்கள் தங்க அனுமதி வாங்கவேண்டும்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
அதேபோல் சென்னையில் முடி திருத்தங்கள், அழகு நிலையங்கள் செயல்பட தடை. ஹார்ட்வேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், செல்போன் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.
வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தனிக்கடைகள் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக் போன்ற சுயதிறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்று பணியாற்றலாம்.
டாக்ஸி ,ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷாக்கள் போன்றவை இயங்குவதற்கு தடை.
நோய் தடுப்பு கட்டுப்பாடு தீவிரமாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு எந்தவித தளர்வும் இல்லாமல் நடைமுறையில் ஊரடங்கு இருக்கும்.
சென்னை தவிர பிற ஊரக பேரூராட்சி பகுதியில் அனைத்து தொழிற்சாலைகளும் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனிமனித, சமய, அரசியல், சமூக பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு வன்பொருள் நிறுவனங்கள் 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நூற்பாலைகள் 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறையே தொடரும்.
தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்றவைகளுக்கு தடை. வீட்டு வேலை செய்வோர் சிறப்பு உதவியாளர்கள் பணிபுரிய ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.
பொதுமக்களுக்கான விமான ரயில், பேருந்து சேவைகள் வரும் 17ஆம் தேதி வரை இயங்காது. அதேபோல் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், கோச்சிங் சென்டர்கள் போன்றவையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுபான கடைகள் போன்றவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.