Skip to main content

மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை கொல்ல முயன்றவர் கைது

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

 

மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

கடலூர் மாவட்டம் மே.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர் மகன் கலைச்செல்வன் (33). இவர் மணிமுக்தாறில்   மே.மாத்தூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மணல் கடத்தலை தடுப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 


 

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை அவர் வழிமறித்தார். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல், கலைச்செல்வன் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் விலகி உயிர் தப்பினார்.


 

பின்னர் இதுகுறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்றது கச்சிப்பெருமாநத்தத்தை சேர்ந்த சின்னக்கண்ணு மகன் சிவக்குமார்(27) என்பதும், அவர் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார், சிவக்குமாரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 

கைதான சிவக்குமார் மீது வேப்பூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், எலவனாசூர்கோட்டை காவல்  நிலையத்தில் மணல் கடத்தல் வழக்கும் உள்ளது. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

 

cuddalore - Sand Issue


 

இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.
 


 

சார்ந்த செய்திகள்