கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணி செய்து வருகிறார் நிர்மல். நேற்று முன்தினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராபின்சன் நிர்மலுக்கு நகரில் இரவு ரோந்து பணிக்கு செல்லுமாறு உத்தரவிட்டிருந்தார் அதன்படி போலீஸ்காரர் நிர்மல் புவனகிரி நகரில் இரவு ரோந்து பணியில் சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் ஒரு முதியவர் மயங்கி விழுந்துகிடந்துள்ளார். அவரை எழுப்பி பார்த்தபோது அவர் பசி மயக்கத்தில் இருந்தது தெரியவந்தது உடனடியாக அவருக்கு வேண்டிய இரவு உணவை வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தார் நிர்மல்.
பிறகு அவரைப் பற்றி விசாரித்தபோது அந்த முதியவர் திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் பெயர் சுந்தரராஜன், குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாக வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்பி வந்துவிட்டாதாகவும் வெளியில் வந்தவர் திரும்ப ஊருக்கு செல்ல முடியாமல் கையில் பணமில்லாமல் வேளாவேளைக்கு சாப்பிட வழியில்லாததால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
யாரிடமும் கையேந்தி பிச்சை கேட்க அவரது மனம் இடம் கொடுக்கவில்லை அதனால் பசி மயக்கம் ஏற்பட்டு சாலையோரம் சுருண்டு கிடந்ததாக நிர்மலிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரை அழைத்து சென்று ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவருக்கு தேவையான உணவு உடை வாங்கி கொடுத்து அவரை தன் சொந்த பராமரிப்பில் பாதுகாப்பாக வைத்திருந்ததோடு நேற்று அவரது மகனுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார் நிர்மல்.
இதையடுத்து நேற்று மாலை அவரது மகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக புறப்பட்டு வந்து போலீஸ்காரர் நிர்மலை சந்தித்தனர். அவர் பெரியவரை அழைத்து வந்து அவர்களிடம் ஒப்படைத்தார் காணாமல் போன தந்தையை பல்வேறு இடங்களில் தேடிக்கொண்டிருந்தோம் தாங்கள் அவரை பாதுகாத்து எங்களிடம் ஒப்படைத்ததற்கு கண்ணீருடன் நன்றி கூறி உள்ளனர் பெரியவர் சுந்தரராஜன் மகனும் மற்றும் உறவினர்களும். முதியவருக்கு உதவி செய்ததோடு அவரைப் பாதுகாத்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த போலீஸ்காரர் நிர்மலின் செயலை கண்டு சந்தோசம் அடைந்தேன், சிதம்பரம் டிஎஸ்பி லா மேக், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் நிர்மலை பாராட்டியுள்ளனர்.