இந்திய விடுதலை போராட்ட வீரரும், மகாகவியுமான பாரதியார் 1908 முதல் 1918 வரை புதுச்சேரியிலுள்ள ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தார்.
இங்கிருந்து பல நூல்களையும் எழுதியுள்ளார். ஈஸ்வரன் கோவில் தெருவிலுள்ள பழமையான வீடுகளில் பாரதியார் வசித்த வீடும் ஒன்று. இப்பொழுது புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறை சார்பில் அங்கு பாரதியாருக்கு அருங்காட்சியம் மற்றும் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது பாரதியாரின் படைப்புகள், அரிய புகைப்படங்கள், நூல்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளனர். இவற்றை புதுச்சேரிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு தமிழர்களும் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் வசித்த இந்த இல்லம் நீண்டகாலம் பழமையாகி சில இடங்களில் சேதமடைந்தது. அதேசமயம் சேதமடைந்தால் அந்த இல்லத்தின் தொன்மை மாறாமல் சரி செய்யும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு 'இன்டாக்' கட்டுமான நிறுவனத்தால் இக்கட்டிடம் ஒரு கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்டது.
ஆனால் புணரமைக்கப்பட்ட மூன்று வருடத்திலேயே கட்டிடம் காரைகள் பெயர்ந்து சிதிலமடைந்தும், பராமரிப்பின்றியும் சேதமடைந்து வருகிறது. இதனை புதுச்சேரி அரசு உடனடியாக சீரமைத்து, பழைய தோற்றம் மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.