தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது. மேலும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (16.05.2024) மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 20 செ.மீக்கு மேல் மழை பதிவாக வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இராதாபுரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் விரிவாக்கம் மற்றும் பயிற்சித்துறையின் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி இன்று (16.05.2024) முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 முதல் 45 கி.மீ வரை அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும். மற்றும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கையினை மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக அறிவிப்பு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.