டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன்’ எனக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்த போது அங்கு எம்.பி.ஸ்வாதி மாலிவால் இல்லை என்று கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், தான் தாக்கப்பட்டதாக போலீசாரிடம் கூறிய ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16 ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து இன்று காலை தனது சமூக வலைதளபக்கத்தின் முகப்பு பக்கத்தில் இருந்த கெஜ்ரிவாலின் புகைப்படத்தை நீக்கியுள்ளார். முன்னதாக ‘மோடியின் மிகப்பெரிய பயம்’ கெஜ்ரிவால் என்று குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை வைத்திருந்த ஸ்வாதி மாலிவால் தற்போது அதனை மாற்றி கருப்பு நிறத்தை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.