10 தனிப்படைகள் அமைத்தும் நெல்லை மாவட்ட காங் தலைவர் ஜெயக்குமார் சித்ரவதைப்படுத்தி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு வாரமாகியும் குற்றவாளிகள் அடையாளம் காணப்படாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.வசம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஜெயக்குமாரின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டபின் அதன் ரிப்போர்ட்களை எஸ்.பி.யான சிலம்பரசனிடம் கொடுத்த மருத்துவர், ஜெயக்குமாரின் தொண்டையில் இரும்பு துகள்கள் இருந்துள்ளன, ரத்தக்காயமும் இருக்கிறது துகள்கள் அடிவயிறு வரை போயிருக்கிறது. பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதால் உடல் முழுவதுமாக எரிந்துள்ளது என்றிருக்கிறார். இதன் பிறகும் கூட எஸ்.பி. ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூட அறிவிக்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த வகையிலான எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தவில்லை.
இதுபோன்று பல சந்தேகக் கேள்விகள் புற்றீசல்கள் போன்று வெளிவருகின்றன. ஜெயக்குமார் தன் மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்ட 30 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்திவருகிறது தனிப்படை. சந்தேகப் பார்வைபட்ட கள்ளிகுளம் ஆனந்தராஜ், சம்பவ நாளில் மும்பைக்குப் பறந்தவர் பின்பு ஊர் திரும்பியவரை வரவழைத்த தனிப்படை அவரை விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டது.
தனியார் ஹோட்டலில் வைத்து விசாரிக்கப்பட்ட காங் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நான் இதுவரை யாரிடமும் பணம் கொடுத்ததாகவும் நான் வாங்கிக்கொண்டதாகவும் என்மீது குற்றச்சாட்டு இல்லை. தேர்தலில் நான் ஒருங்கிணைப்பாளர் பணியை மட்டுமே மேற்கொண்டேன். அந்தக் கடிதம் அவர் எழுதியதுதானா என்று போலீஸ் விசாரிக்கணும் என்று விசாரணையில் சொன்னதாகத் தெரிவித்தார்.
சாத்தான்குளம் பக்கம் உள்ள மரைன் கல்லூரியில் வைத்து விசாரிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ரூபி மனோகரனோ இருவரும் இணைந்தே செயல்பட்டோம். அவர் கடிதத்தில் கூறியபடி நான் எந்தப் பணமும் தரவேண்டியதில்லை. அதில் உண்மையில்லை என்று தெரிவித்துவிட்டேன் என்கிறார். ஜெயக்குமார் குறிப்பிட்ட அனைத்து நபர்களும் தனக்கு மிரட்டல் விடுக்கின்றனர் அச்சுறுத்தலிருக்கிறது என்று ஒருவர் விடாமல் குறிப்பிட்டது விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கத்தில் உள்ளது என்கிற கருத்தும் வெளிப்படுகின்றன.
ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின் இந்தக் கடிதத்தை உவரி காவல் நிலையத்தில் புகார் மனுவுடன் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தையும் அவர் இதற்கு முன்பாக நார்மலான சூழலில் வழக்கமாக எழுதிய எழுத்துக்களையும் தனிப்படையினர் ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் இவைகள் ஒத்துப் போகவில்லை என்ற பேச்சும் பலமாக அடிபடுகின்றன.
ஜெயக்குமாரின் வீட்டிற்கு பின்புறமுள்ள அவரின் தென்னந்தோப்பில் (சம்பவ இடம்) அவர் சில வேளைகளில் கட்சிக்காரர்களுடன் அந்த இடத்தில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிப்பதும் உண்டாம். அந்த இடத்தில்தான் அவர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அப்போது கிளம்பும் தீ ஜூவாலையும், எழும்புகிற துர்நாற்றப் புகையும் மிக அருகிலுள்ள ஜெயக்குமாரின் வீட்டாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற சந்தேகமும் தனிப்படைக்கு உண்டு என்றாலும் அது தெளிவு படுத்தப்படவில்லை.
மே. 2 அன்று இரவு காரில் கிளம்பிச் சென்ற ஜெயக்குமார் 10 மணியளவில் திசையன்விளையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சாமான்களை வாங்குவதற்காக கடைக்காரரிடம் பேசிவிட்டு வெளியேறியதுதான் அவரின் கடைசி நிகழ்ச்சி. அதன் பின் இரவு வெகுநேரமாகியும் விடியும் வரை வீடு திரும்பவில்லை. ஆனால் அவரின் கார் வீட்டிற்கு வெளியே நின்றிருந்ததாம். இரவு சென்றவர் விடிந்தும் திரும்பவில்லை என்கிறபோது அது பற்றி 3ம் தேதி காலையில் புகார் செய்யாமல் அன்றைய தினம் இரவில் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்ததில் முரண்பாடு இருப்பதாக கூறுகின்றனர்.
சூப்பர் மார்க்கெட்டிலிருந்து ஜெயக்குமார் வீடு திரும்புகிற போது அவரது காரை மூன்று கார்கள் பின் தொடர்ந்து வந்தது கரைச்சுத்துப் புதூரின் தனியார் வீடு ஒன்றிலிருக்கிற சி.சி.டி.வி.யில் பதிவாகி இருக்கிறது. அதன் பின் அவரது வீடிருக்கும் தொலை தூரப் பகுதி வரை சி.சி.டி.வி. இல்லாததால் அது பதிவாகவில்லை. அந்த இரவில் மூன்று காரில் வந்தவர்கள், ஜெயக்குமாரின் காரை வழி மறித்துக் கடத்தினார்களா என்கிற சந்தேகமிருப்பதால் அதன் காட்சிகளை தனிப்படை கைப்பற்றி ஆய்வு செய்கிறது. அதே சமயம் சம்பவத்திற்கு முதல் நாள் நவ்வலடியிலிருந்து கரைச்சுத்துப் புதூர் வந்த குவாலிஸ் கார் ஒன்றில் பத்துப் பேர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த வாகனம் அந்த தனியாரின் வீட்டின் பக்கம் வந்தபோது திடீரென்று திரும்பிச் சென்றிருக்கிறது. சிசிடிவியில் பதிவான அந்தக் காட்சியையும் தனிப்படை கைப்பற்றியுள்ளது. வேவு பார்க்க வந்த வாகனத்திலிருந்தவர்கள் கூலிப்படையினரா? எதற்காக வந்தார்கள்? என விசாரணையை மேற்கொண்ட தனிப்படையினர் அந்த வாகனம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு மூன்றாவாதாக கைமாற்றப்பட்டதாம். அது பற்றிய விசாரணையோடு தூத்துக்குடியின் சில கூலிப்படையினரிடமும் தனிப்படை குடைந்துவிட்டு வந்திருக்கிறது.
எரிக்கப்பட்ட ஜெயக்குமாரின் உடலை கடப்பாக் கல்லில் வைத்து தண்ணீரில் மூழ்கினாலும் அவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக மின் வயர்களால் கட்டப்பட்டிருந்தது. எரிந்த போது வயரின் கம்பிகள் தெரிந்துள்ளன. இதனை ஆராய்ந்த தனிப்படையினர். கொலையாளிகளின் நோக்கம் கடப்பாக் கல்லில் ஜெயக்குமாரின் உடலைக் கட்டியவர்கள் அப்படியே அதனை கிணறு அல்லது கடலில் வீசிவிட்டால் வெளியே வராமல் போய்விடும் என்பது தான் அவர்களின் திட்டமாக இருக்க வேண்டும். ஆனால் இரவு வெகுநேரமாகிவிட்டபடியால் உடலை வீசுவதற்காகக் கொண்டு சென்றால் யாரேனும் பாத்துவிட வாய்ப்பாகிவிடும் என்பதால் திட்டத்தை மாற்றி அவசரமாக இந்தப் பகுதிக்கு கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாம்.
உடல் முழுவதும் அடையாளம் தெரியாமல் எரிந்துவிட்டதால் அதனை அடையாளம் காண்கிற வகையில் ஜெயக்குமாரின் சட்டைப்பையிலிருந்த அவரது வாக்காளர் அடையாளர் அட்டை, கிரெடிட், மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை எரிந்த அவரின் உடலின் அருகே கொலையாளிகளே எடுத்துப் போட்டிருக்கலாம். அந்தக் கார்டுகளை தடயவியல் சோதனைக்குட்படுத்தினால் கைரேகைகள் தெரியலாம். ஆக சம்பவச் சூழலைப் பார்க்கும் போது ஜெயக்குமார் இந்தப் பகுதிலேயே கொலை செய்யப்பட்டிருக்கலாம். காரணமானவர்கள் இந்தப் பகுதியினராகவுமிருக்கலாம். பிற செயல்களுக்காக வாடகை முறைக் கிரிமினல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உண்டு என்கிறார் அந்த அதிகாரி.
கள நிலவரங்களால் புலனாய்வில் தடுமாற்றும், என்பதால் இன்வெஸ்டிகேஷன் டீம், சம்பவத்தை ஆதாரத்துடன் அடையாளம் காண்கிற வகையிலான தடயவியல் மற்றும் நவீன தொழில் நுட்ப முறைகளையும் பயன்படுத்தியிருகு்கிறார்கள். ஜெயக்குமாரின் மொபைல் நம்பருக்கான டம்மி சிம்கார்டைப் பயன்படுத்திய சைபர் கிரைம் அலசியதில் அதில் பல வித்தியாசமான படங்கள், அதில் ஜெயக்குமார் இருப்பதும் தெரியவர, அது தொடர்பானவைகளை தனிப்படையினர் விசாரித்திருக்கினறனர். டம்மி சிம்மில் கிடைத்த விஷயங்கள் ரகசிய படங்கள் பற்றியது ஜெயக்குமாரின் வீட்டாருக்கும் தெரிந்த விஷயம்தானாம்.
இவைகளோடு சைபர் கிரைம், சம்பவம் நடந்த இடத்திலிருந்து செல்போன் அழைப்புகள் சென்றுள்ளது, வந்தவைகள் பற்றியும் கம்டவர் இணைப்பின் மூலம் போன்கால்களை ட்ரேஸ் செய்து ஆராய்ந்து வருகிறதாம். இதனிடையே மாவட்ட தடயவியல் துறையின் ஆய்வில் எந்த தடயங்களும் கிடைக்காமல் போகவே டி.ஐ.ஜி. இன்சார்ஜிலிருந்த சிட்டி கமிஷனரான மூர்த்தி, சிட்டி தடயவியல் துறையை அனுப்பி ஸ்பாட்டை ஆராய வைத்திருக்கிறார். சிட்டி பிரிவும் சம்பவ இடத்தை ஆராய்ந்து சேகரித்த தடயங்களுடன் போஸ்ட் மார்ட்ட அறிக்கையையும் ஒத்துப் பார்த்திருக்கிறார்கள். போஸ்ட் மார்ட்ட அறிக்கையில், கொல்லப்பட்டவரின் தொண்டைக் குழியில் ரத்தங்கள் வருவதையும், அதில் காணப்பட்ட கருப்பு போன்ற இரும்புத் துகள்களையும் சிட்டி தடயவியல் துறை தீவிர பரிசோதனை செய்து கமிசனர் மூர்த்திக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்களாம்.
அதில் தொண்டைக்குழியில் வழியும் ரத்தத்திற்கு காரணம் அதிலிருந்து எடுக்கப்பட்ட கருப்பு நிற ஸ்டீல் துகள்கள். அது வீடுகளில் சாதாரணமாக பாத்திரம் கழுவ தேய்க்கப் பயன்படுத்தப்படுகிற கருப்பு நிறத்திலிருக்கும் ஸ்டீல் வாஷ் பிரஸ். ஸ்டீலில் ஆன பிரஷ்போன்றிருக்கும். அந்த ஸ்டீல் வாஷ்பிரஷ்ஷை ஜெயக்குமாரின் வாயினுள் திணிக்கப்பட்டு அவர் சப்தமிடாமலிருக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கு. அப்படிச் செய்ததில் தொண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்ததுடன் மூச்சடைப்பையும் ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டிகிறதாம்.
ஸ்டீல் வாஷ் பிரஷ்ஷை வாயில் திணிக்கிற அளவுக்குத் தெரிந்த தொழில் முறை கிரிமினல்களின் மூளைகள் யோசிக்காது. அவர்களின் பாணி, ஆளை முடிப்பதுதான். மேலும் இந்த ஸ்டீல் வாஷ் பிரஷ் ஒவ்வொரு வீடு தோறும் கட்டாயமிருக்கும் இப்போது யோசியுங்கள். சம்பவத்தை நடத்தியவர்கள் ஸ்டீல் வாஷ் பிரஷ்ஷைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவர்களுக்கு நிறைய அவகாசமிருந்திருக்கிறது என்று சொல்லும் டீம், ஜெயக்குமார் கொலைச் சம்பவம் நடந்து முடிந்து உடல் அடக்கம் செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தார் கொலையுண்ட உடல் ஜெயக்குமாரின் உடல்தானா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கெனவே சந்தேகத்திலிருக்கும் தனிப்படை ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி இளையமகன் மார்ட்டின் இருவரையும் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தியவர்கள் மார்ட்டினின் நண்பர்களையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.