பெண் போலீசாரை அவதூறாகப் பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது திருச்சியில் மேலும் ஒரு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸாரை அவதூறாக பேசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் புதன்கிழமை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பெண் போலீசார் தன்னை தாக்கியதாக அவர் நீதிபதியிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வேனில் சவுக்கு சங்கர் அமர்ந்திருந்த போது பாதுகாப்பு பணிக்கு சென்ற திருவறும்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமியிடம், சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், “உன் உயர் அதிகாரியைப் பற்றி நான் மீடியாவில் போட்டு கிழிப்பேன்.. உன்னுடைய வேலையை காலி செய்கிறேன் பார்..” என அவர் கூறியதாக மீண்டும் ஒரு புகார் எழுந்தது. இது தொடர்பாக ஜோதிலட்சுமி திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.