தமிழகத்தின் வடமாவட்டங்களில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டச் செல்பவர்கள் அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மரம் வெட்டச்சென்ற தமிழக கூலித் தொழிலாளர்களைப் பிடித்துச் சுட்டுக்கொன்றதால், அதன்பின் அங்கு செல்வது குறைந்தது. இருந்தும் ஆந்திர செம்மர மாஃபியாக்கள், அதிக கூலி ஆசைகாட்டி அழைத்துச் செல்வது வாடிக்கையாகவே உள்ளது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 18-ஆம் தேதி) ஆந்திர மாநிலம் புத்தூர் சோதனைச் சாவடியில், ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். லாரியில் தார்ப்பாய்களுக்குக் கீழே, 30-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அவர்களை மடக்கி போலீஸார் விசாரிக்கும்போது, 7 பேர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மீதியிருந்த 25 பேரை பிடித்து விசாரித்தபோது, செம்மரம் வெட்ட அழைத்துச் செல்வது தெரிந்தது. 25 பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர் போலீசார்.
தப்பி ஓடிய 7 பேரை தேடத் துவங்கியுள்ள போலீசார், அதேநேரத்தில் இவர்களை அழைத்து வந்தது யார்? ஆந்திராவில் அவர்களின் தொடர்பாளர் யார்? தமிழகத்தில் இருந்து அனுப்பிவைத்தது யார்? என்பனவற்றை விசாரித்து வருகின்றனர்.