திருச்சி மாநகராட்சியில் நாய்கடிக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்காக பெருகியுள்ள நாயின் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி 5 இடங்களில் அறுவை சிகிச்சை முகாம்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் நாய்கடி பாதிப்புகள் குறையவில்லை என கூறப்படுகிறது. மேலும் தெரு நாய்களால் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் திருச்சி பொன்நகர், காமராஜர்புரம் பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி வருவதாகவும் அடிக்கடி அது யாரையாவது கடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை அது வெறிநாயாக இருக்கலாம் என்ற அச்சமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை(17.5.2024) அந்த நாய் அடுத்தடுத்து 3 பேரை கடித்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சுதா (37),அவரது மகள் யமுனா(16), மற்றொரு சிறுமி மணிகண்டன் மகள் பிருந்தா(13) ஆகியோர் நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சியிலும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடமும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுளளது. விரைவில் அந்த நாய் பிடிக்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பிடிபடுவதற்குள் வேறு யாரையாவது அந்த நாய் கடிக்காமல் இருக்க வேண்டும் என அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.