ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் அரசு பள்ளிகள் முடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அந்தந்த கிராம தன்னார்வ இளைஞர்கள் பள்ளிகளில் பாடம் நடத்துவதுடன் மதிய உணவும் வழங்கி வருகின்றனர். ஆனால் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள், போராட்டக் காலங்களில் முழுநேர பணி செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். அதனால் தற்போதும் முழுநேரப் பணி செய்து வருகிறார்கள். ஆனால் அனைத்து ஆசிரியர்களும் போராட்டம் முடிந்து பணிக்கு திரும்பும்போது மீண்டும் இவர்கள் பகுதி நேர ஆசிரியர்களாகவே வைக்கப்பட உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறும் போது...
கடந்த 22ந்தேதி முதல் ஜாக்டோஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் பள்ளிகளை பொறுத்தமட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களே திறந்து நடத்தி வருகின்றனர். ஆணைப்படி இப்பகுதிநேர ஆசிரியர்கள், வாரத்தில் 3 அரைநாட்கள் என மாதத்தில் மொத்தம் 12 அரைநாட்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். பள்ளிகளின் சூழலைப் பொறுத்து தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கூடுதல் நாட்களும், கூடுதல் நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல்திறன் போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளை போதித்து வருகின்றனர். 16549 பேரில் தற்போது 12637 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 2012ல் ரூ.5000 தொகுப்பூதியம் முதலில் தரப்பட்டது. 5 வருடத்துக்கு முன்பு ரூ.2000 ஜெயலலிதாவால் உயர்த்தப்பட்டது. ஒரு வருடத்துக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ரூ.700 உயர்த்தினார். எட்டு கல்வி ஆண்டுகளாக பணியாற்றி வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.7700 என குறைந்த சம்பளமே தரப்பட்டு வருகிறது.
7வது ஊதியக்குழுவின் 30% ஊதிய உயர்வு அமல்செய்யவில்லை. மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியத்தையும் அமல் செய்யவில்லை. மேலும், ஒப்பந்த வேலையில் உள்ளவர்களுக்கு சட்டபடி வருடாந்திர 10% ஊதிய உயர்வு, P.F., E.S.I., போனஸ் போன்றவையும் நடைமுறைப்படுத்தவில்லை. தொடர்ந்து முறையிட்டுவந்தாலும் அரசு கொஞ்சம்கூட கண்டுகொள்வதில்லை. ஆந்திராவில் இதே பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14203 சம்பளம் தரப்படுகிறது. மேலும் மகளிருக்கு மகப்பேறுவிடுப்பும் தரப்படுகிறது. தமிழகத்தில் ஆந்திராவைப்போல அதிக ஊதியமும் வழங்குவதில்லை.
அரசின் பணபலன்களை எதுவும் பெறமுடியாமல், இக்குறைந்த ஊதியத்தில் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களை, பகுதிநேரம்போக இதர நேரங்களையும் பெரும்பாலான பள்ளிகளில் எல்லா வகையான பணிகளிலும் ஈடுபடுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போதும் பகுதிநேர ஆசிரியர்கள் இதர பாடங்களை நடத்தி மாணவர்களுக்கு கல்வி பயின்று வருகின்றனர். வேலைநிறுத்த போராட்ட காலங்களில் மாற்று ஏற்பாடாக அரசு இப்பகுதிநேர ஆசிரியர்களையே 2015 முதல் பயன்படுத்தி வருகிறது. தற்போதும் இயக்கப்பட்டுவரும் பள்ளிகள் அனைத்துமே இப்பகுதிநேர ஆசிரியர்கள்தான் நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கென தனியே சம்பளம் எதுவும் வழங்காவிட்டாலும் முறைப்படி முழுநேரவேலையில் அரசு தங்களை அமர்த்திட வேண்டும் என கேட்டுவருகின்றனர். 8 வருடமாக பள்ளிகளை நடத்தும் அனுபவம், 4 வருட வேலைநிறுத்த போராட்டங்களின் போது பள்ளிகளை திறம்பட நடத்திய அனுபவமும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு உள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களில் பலர் Diploma முதல் Ph.D வரை அரசு கேட்கும் உரிய கல்வித் தகுதியை பெற்றுள்ளோம். இந்த வேலைக்கு நேர்முகத் தேர்வு நடத்தியும், சான்றிதழ் சரிபார்க்கபட்டும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளோம்.
இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கே ரூ.10000 சம்பளத்துடன் முழுநேரவேலை கொடுங்கள் எனக் கேட்டு வருகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்களுக்கு பள்ளி நடத்தும் அனுபவமும், கல்வித் தகுதியும் இருக்கும்போது ஏன் புதிதாக தற்காலிக ஆசிரியர்களை ரூ.10000 சம்பளத்தில் பணி அமர்த்தனும் என அரசிடம் முறையிட்டு வருகின்றனர்.0
இப்பகுதிநேர ஆசிரியர்களை திட்டவேலையில் பணிஅமர்த்திய அரசு, இந்த 8 கல்வி ஆண்டுகளில் இதுவரை பணிநிரந்தரம் செய்யாமல் உள்ளது. நாங்கள் 1 லட்சம் சம்பளம் கேட்கவில்லை. அவசர காலங்களில் அரசுக்கு கை கொடுக்கும் எங்களுக்கு முதல்கட்டமாக முழுநேரவேலையாவது கொடுங்கள் என கேட்கிறோம். இப்போதுள்ள பகுதிநேர வேலையால் எங்களின் மீதி நேரமும் உரிய ஊதியமின்றி சுரண்டப்படுகிறது. ரூ.7700 சம்பளத்தில் பள்ளிக்கு சென்றுவர பேருந்து கட்டணம், வண்டி பெட்ரோல் செலவு, சாப்பாடு, டீ செலவுகளைகூட செய்யமுடியவில்லை. குழந்தை குட்டிகளோடு குடும்பத்தையும் இந்த சம்பளத்தில் கவனிக்க முடியவில்லை.
எனவே புதிதாக வேலைக்கு ஆள்தேடும்போது இந்த பகுதிநேர ஆசிரியர்களை ஏன் தேர்வு செய்யக்கூடாது? வேலைநிறுத்தம் நடக்கும்போது மட்டுமின்றி அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர வேலை கொடுங்கள். இப்போதைக்கு இந்த ரூ.10000ஐ பகுதிநேர ஆசிரியர்களுக்கே கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்களில் 90% பேர் திருமணமானவர்கள், ஏழை விவசாயக் குடும்பத்தினர்கள்தான். எனவே கருணை காட்டுங்கள். நல்ல வழிகாட்டுங்கள் இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு என்றுதானே கேட்கிறோம். யாராக இருந்தாலும் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று கல்விஅமைச்சர் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
ஆனால் இப்போது அனுபவம், கல்வித்தகுதி பார்க்காமல், ஓய்வு பெற்றவர்களைகூட இந்த ரூ.10000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதாக வெளிவந்த அறிவிப்பு அமைச்சரின் முந்தைய அறிவிப்புக்கு நேர்எதிராக உள்ளது. பல வருடமாக பள்ளிகளை கவனித்து வரும் பல்வேறுவகை 12000 பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்கள் என்ற அறிவிப்பினை இந்த தருணத்திலாவது அறிவியுங்கள் என முதல்வருக்கு அவசர கோரிக்கையாக வேண்டுகோள் வைத்துள்ளோம் என்றார்.