விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’லிரிக் வீடியோ வெளியானது. இதையடுத்து இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அடுத்த மாதமான ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஜய் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார். இதையடுத்து தற்போது அவருக்கான வி.எஃப்.எக்ஸ் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.