நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் குடும்பமும், அதிகாரமும்தான் முக்கியம். காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சி அமைந்தால் ராமர் மீண்டும் குடிசைக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரை கொண்டு இடித்து விடுவார்கள். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும் எங்கு பயன்படுத்த கூடாது என்று காங்கிரஸும், சமாஜ்வாதியும் யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மும்பையில் இன்று (18-05-24) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மல்லிகார்ஜுன கார்கேவிடம், பிரதமர் மோடி கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “இன்று வரை புல்டோசர் பயன்படுத்தியதில்லை. தூண்டுதல் பேச்சு பேசுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரே அதைச் செய்கிறார். மக்களைத் தூண்டி விடுகிறார். எங்கள் அரசாங்கம் வந்த பிறகு, அரசியலமைப்பின் படி அனைத்தும் பாதுகாக்கப்படும், நாங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றுவோம். மகாராஷ்டிராவின் சட்டவிரோத அரசு, துரோகம் மற்றும் சதி அடிப்படையில் அமைக்கப்பட்டது. அதற்கு பிரதமரே துணை நிற்கிறார். மகாராஷ்டிராவிலும் அவரது பேரணிகள் நடத்தப்படுகின்றன. அவர் எங்கு சென்றாலும், அவர் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
உண்மையான கட்சிகளிடம் இருந்து கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டு, பாஜகவை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. இது நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவு. ஆனால் அனைத்தும் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் நடக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள 48 இடங்களில் 46 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதை மக்களே சொல்கிறார்கள். எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜகவைத் தோற்கடிக்கும். இது ஜனநாயகம், எதேச்சதிகாரம் அல்ல. பா.ஜ.கவை தோற்கடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்” என்று கூறினார்.