கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் இளம் தோட்டக்கலை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு ரேண்டம் எண்-ஐ பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு இளம் அறிவியல் வேளாண் அரசு ஒதுக்கீட்டில் 500 இடங்களும், வேளாண்மை சுயநிதி பிரிவில் 700 இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் தோட்டக்கலை துறைக்கு 100 இடங்களும், பட்டய வேளாண் அறிவியல் படிப்புக்கு 50 இடங்களும் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் விவசாயத் துறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணாமலை பல்கலைகழக விவசாயத் துறை அனைத்து கட்டமைப்பு வசதியுடன் செயல்படும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம். விவசாய மாணவர்களுக்கு தேவையான விவசாய நிலங்கள் உள்ளது. அப்படி பற்றாக்குறை ஏற்பட்டால் பல்கலைக்கழக வளாகங்களில் உதிரியாக உள்ள நிலங்களை விவசாயத்துறை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
அதேபோல் இந்த ஆண்டு முதல் மூன்று ஆண்டுக்கு தமிழக அளவில் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. இதில் பேராசியர்கள் தகுதி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் 3 முறை தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம். பல்கலைக்கழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு 11வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை பல்கலைக்கழகங்களில் உலக தமிழ் மாநாடு நடந்தது இல்லை.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தை மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து புலங்களையும் தேர்வு செய்து நன்கு கல்வி அறிவு பெற்று திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் பின்னர் வெளியிடப்படும். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தர வரிசை பட்டியல் வெளியிட்ட பின்னர் அறிவிக்கப்படும்.
கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கிடைத்த தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அதற்கான கடிதத்தை பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் எனக் கூறினார்.
இவருடன் மாணவர்கள் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் ராம்குமார், பதிவாளர் கிருஷ்ணமோகன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வ நாராயணன், வேளாண் புல முதல்வர் சாந்தாகோவிந் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்கள் பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.