கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், அதிக தொழில்நுட்ப வசதியுடன் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய நெய்வேலி அனல்மின் நிலையம் (NNTP) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி சுமார் 100 டன் அளவிற்கு மேல் குவித்து வைத்திருக்கும் பங்கர் என சொல்லப்படும் இடத்தில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக நிலக்கரி தீப்பிடித்து, தீ கரும்புகையுடன் வேகமாக பரவியதால், அப்பகுதியில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சொசைட்டி தொழிலாளர்களான திருநாவுக்கரசு (47). தட்சிணாமூர்த்தி(54). செல்வராஜ்(47). சுரேஷ், செந்தில்குமார் ஆகிய 5 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் திருநாவுக்கரசு என்ற தொழிலாளி மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 தொழிலாளர்களையும் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே என்எல்சி மருத்துவமனைக்கு என்.எல்.சி நிறுவன தலைவர் ராகேஷ்குமார், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று தீ விபத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். இந்த தீ விபத்து குறித்து நெய்வேலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிதாக தொடங்கப்பட்ட புதிய அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், எளிதில் தீப்பிடிக்க கூடிய இடங்களில் போதிய மின் தடுப்பு சாதனங்கள் இல்லாத காரணத்தாலும் இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு உரிய நிவாரணமும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.