![ddddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/zbT4GI-kPakKJwozqNV82BBSV20Z8DTtQgFRDXbcZSs/1596000090/sites/default/files/inline-images/650_32.jpg)
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வேலவிநாயகர்குப்பத்தை சேர்ந்த வைரக்கண்ணு மகன் சண்முகம் (40). இவர் மரம் அறுக்கும் பிளேடு விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் தட்சிணாமூர்த்தி (40), விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்த சீசேசான் செந்தில் (45), வெள்ளக்கண்ணு மகன் இளங்கோவன் (40), குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் கோதண்டராமன் (40) ஆகியோருடன் தனது காரில், கடலூர் முதுநகர் பகுதியிலுள்ள ஒரு மரப்பட்டறைக்கு சென்று மரம் அறுக்கும் பிளேடு புதுப்பித்து கொடுத்துவிட்டு தனது நண்பர்கள் நான்கு பேர்களுடனும் சண்முகம் தனது காரில் குறிஞ்சிப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காரை சண்முகம் ஓட்டினார். குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை அருகே மின்சார அலுவலகம் எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென்று சண்முகத்தின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது அதிவேகமாக மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த செந்தில், தட்சிணாமூர்த்தி, இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த சண்முகம் மற்றும் கோதண்டராமன் இருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே இதுகுறித்து தகவலறிந்த குள்ளஞ்சாவடி காவல் காவல் ஆய்வாளர் சத்தியபாமா மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து தகவலறிந்த இறந்து போன மூன்று பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.