Skip to main content

கடலூர் விவசாயி தற்கொலை - மக்களின் போராட்டத்திற்கு பணிந்தது கோட்டக் மகேந்திரா வங்கி

Published on 30/06/2018 | Edited on 01/07/2018
ci

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே கருணாகர நல்லூரைச் சேர்ந்தவர் சு.தமிழரசன் (48). விவசாயியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் ரூ.5,13.250.00 கடனில் புதிய டிராக்டருக்கான கடன் வாங்கியுள்ளார். கடன் தொகையை 6 மாதத்திற்கு ஒரு முறை 88.800 என 8 தவனைமுறையில் கட்டுவதாக பெற்றுள்ளார். இதில் கடந்த ஆண்டு 2 தவணையை கட்டியுள்ளார். இந்த ஆண்டுக்கான முதல் தவணையில் ரூ 50 ஆயிரம் மட்டும் கடந்த ஏப் 24-ந்தேதி கட்டியுள்ளார். இந்த தவணையில் ரூ 38.800 பாக்கியுள்ளது. அடுத்த தவணை வரும் அக்டோபர் மாதம் கட்டவேண்டும். இவர் கடனை அடைக்க 2020 ஆண்டு வரை கால அவகாசம் உள்ளது.

 

இந்த நிலையில் புதனன்று கடனை வசூல் செய்ய வந்த வங்கியின் வசூல் ஊழியர்கள் தமிழரசனின் குடும்பத்தினரிடம் கடந்த தவனையின் பாக்கி தொகையை உடனே செலுத்துங்கள் என்று கோபமாக பேசியுள்ளனர். அப்போது அவர்கள் சக்கரை ஆலையில் இருந்து பணம் வந்தவுடன் அடுத்த தவனையில் சேர்த்து கட்டிவிடுகிறேன் என்று கூறியுள்ளனர். இதனை ஏற்காத அவர்கள் குடும்பத்தினரிடம் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த தமிழரசன் அன்றே விஷத்தை அருந்தி வயலில் படுத்துவிட்டார். இதனையறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இல்லாமல் வெள்ளியன்று இறந்துவிட்டார்.

 

kot

 

 தமிழரசன் இறப்புக்கு காரணமான வங்கி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை சிதம்பரம்,கடலூரில் உள்ள கோட்டக் மகேந்திரா நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு பிரிவை முற்றுகையிட்டனர்.

 

இதனை தொடர்ந்து வெள்ளி இரவு சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கோட்டாட்சியர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சம்பந்தபட்ட வங்கி அதிகாரிகள் வரவில்லை. எனவே சனிக்கிழமை காலை அமைதி கூட்டம் நடைபெறும் என்றார். பின்னர் அனைவரும் இரவு கலைந்து சென்றனர். சனிக்கிழமை காலை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டெல்டா பாசன விவசாய சங்க இளங்கீரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட துணைச்செயலாளர்கள் கற்பனைச்செல்வம், ராமச்சந்திரன், விதொச மாவட்ட செயலாளர் பிரகாஷ்,மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், பாமக மாநில நிர்வாகி சந்திரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அறவாழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி சேகர். தவாக மாவட்ட செயலாளர் முடிவண்ணன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள்,காவல்துறையினர் கலந்து கொண்டனர். இதில் வங்கி தரப்பில் பேசிய மண்டலமேலாளர் கமலகண்ணன் ட்ராக்டர் லோனை தள்ளுபடி செய்து வண்டியை ஒப்படைத்து விடுகிறோம் என்றார். அதற்கு விவசாய சங்கத்தினர் சாவுக்கு காரணம் வங்கி ஊழிர்கள் தான் எனவே அவரது குடும்பத்திற்கு ரூ50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றனர். மாலை வங்கியின் தலைமையில் இதுகுறித்து பேசி முடிவு எடுக்கபடும் என்று கூறியதால் யாரும் கலைந்து போகமல்  கோட்டாட்சியர் அலுவலகத்திலே காத்திருந்தனர். வங்கி நிர்வாகம் சரியான முடிவை அறிவிக்கவில்லை என்றால் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக  தெரிவித்தனர்.தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 

 

இந்நிலையில் இரவு வெகு நேரத்திற்கு பின்னர் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.  தமிழரசன் ஈமச்சடங்கிற்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், தமிழரசன் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணமும், டிராக்டர் கடனை தள்ளுபடி செய்வதோடு, டிராக்டரை திரும்ப ஒப்படைத்து விடுவதாகவும்  வங்கி உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.


 

சார்ந்த செய்திகள்