Skip to main content

‘விளையாட்டு வினையானது’ - பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
Cuddalore dt Vadalur Parvathipuram area Thirumurugan son Kishore incident

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவரது மகன் கிஷோர் (வயது 15). இவர் வடலூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்து மாலை பள்ளி திடலில் விளையாட்டுப் பயிற்சியில் வட்டு எறியும் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அதே திடலில் மறுமுனையில் ஈட்டி எறிதல் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அச்சமயத்தில் மற்றொரு மாணவன் ஈட்டி எறிந்த போது எதிர்பாராத விதமாக கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கிஷோரை மீட்டு அருகில் இருந்தவர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் மாணவன் கிஷோர் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிஷோர் மாற்றப்பட்டார். அங்கு கிஷோர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது மகன் மூளைச்சாவு அடைந்ததை கேள்விப்பட்ட அவரது தாயார், கடந்த சில நாட்களாக போலீசார் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் 'புள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே' என மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பள்ளியில் உள்ள சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் பயிற்சி ஒரே இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் வழங்கப்பட்டது தான் இந்த விபத்துக்கு காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈட்டி எறிதல் பயிற்சியின்போது மாணவன் தலையில் ஈட்டி பாய்ந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவர் கிஷோர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்தார். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாமல் பள்ளியில் ஈட்டி எறிதல் பயிற்சி அளித்தபோது படுகாயமடைந்து மாணவர் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் பிரவீன், ஆசிரியர்கள் பிரவீன் குமார், சரவணன், விநாயக மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்