![virudhachalam](http://image.nakkheeran.in/cdn/farfuture/5HKcLgTLFYot4HvWNI9f8AemolWuifmxuJnXVWLt8SU/1592634934/sites/default/files/inline-images/virudhachalam%2024.jpg)
கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அய்யாசாமி மனைவி தனலட்சுமி, வரதராஜ் மனைவி கனிமொழி ஆகியோர் போட்டியிட்டனர். அதில் தனலட்சுமி வெற்றி பெற்று தற்போது ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து வருகிறார். அதையடுத்து அய்யாசாமி தரப்பிற்கும், வரதராஜன் தரப்பிற்கும் தேர்தல் முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மினி டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக வரதராஜ் தரப்பைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது மினி டேங்க்கில் ஷாக் அடித்து மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் விஜயகுமாரால்தான் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது எனக்கூறி அய்யாசாமி தரப்பினர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் குறித்த விசாரணைக்காக நேற்று விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு இரு தரப்பையும் போலீசார் அழைத்துள்ளனர். பின்னர் 'நாளை (இன்று) விசாரணை செய்து கொள்ளலாம்' என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பிள்ளனர். அவ்வாறு திரும்பி செல்லும்போது இரு தரப்பினரும் குப்பநத்தம் செல்லும் வழியிலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் அதனைத் தொடர்ந்து கிராமத்திற்கு சென்ற அய்யாசாமி தரப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் வரதராஜ் தரப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரின் வீடுகளை அடித்து நொறுக்கியதுடன் 30-க்கும் மேற்பட்ட பெண்களையும் தாக்கியுள்ளனர்.
வீடுகளில் உள்ள பீரோக்கள், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், மளிகைக் கடை, வீடுகளின் கூரைகள், டிவி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் கட்டை மற்றும் இரும்புக் கம்பிகள் கொண்டு கொடூரமாகத் தாக்கியதால் கிராமமே பதற்றத்தில் உள்ளது.
கொடூர தாக்குதலால் பயந்து போன பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அழைத்துக்கொண்டு வயல்வெளி மற்றும் காடுகளுக்கு ஓடி பதுங்கியுள்ளதாக அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர். மோதல் சம்பவத்தில் பல பெண்கள் தலை, கை கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
அடிபட்ட பெண்களுக்கு விருதாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலவரத்திற்கு முக்கியக் காரணமான குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/6ivcz__3NP0Kg7DKSZn9v4NaT8EzjPE1uO3Obz6YN1s/1590822160/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-01.gif)
தொடர்ச்சியாக தேர்தலின் முன் பகை காரணமாக நடைபெற்று வந்த பனிப்போரில் கோஷ்டிப் பூசல் ஆகி மிகப் பெரிய கலவரத்திற்குக் கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.