கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மணிமுக்தா ஆற்றின் மறுகரையில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் அக்கிராம விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான நெற்பயிர்களை விவசாயம் செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பெய்த கன மழையால், மணிமுக்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து, தற்போது வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அறுவடைக்குத் தயாராக இருந்த 2,000 ஏக்கர் நெற்பயிர்களை, கனமழையால் அறுவடை செய்ய முடியாமல் இருந்த விவசாயிகள், தற்போது கைகளாலேயே அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அக்கிராமத்தில் இருந்து மறுகரைக்கு உள்ள விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக, அப்பகுதி விவசாயிகள் வருடம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து, விவசாய வாகனங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் செல்வதற்காக தரைப் பாலம் அமைத்திருந்தனர். மழையின்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்த நிலையிலும், மறு முளைப்பு அடைந்துள்ள நிலையில், அடுத்த மழை வருவதற்குள், நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்யவேண்டும் என்பதால், கைகளால் அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு அறுவடை செய்த நெல்மணிகளை அதிவேகமாகச் செல்லக்கூடிய ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் விவசாயிகள் தலையில் தூக்கிக்கொண்டு கடந்து சென்று வருகின்றனர். ஒரு ஏக்கர் பரப்பளவு அறுவடை செய்வதற்கு 90 ஆட்கள் தேவை என்பதால், 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மறுகரையில் உள்ள நிலையில், அனைத்துப் பயிர்களையும் அறுவடை செய்து கொண்டுவர பல மாதங்கள் ஆகும் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கை அறுவடை பணி, நெற்பயிர்களை இடம் மாற்றுதல், நெல்மணிகளைப் பிரித்தெடுத்தல் என ஒரு விவசாயிக்கு மூன்று நாட்கள் ஆகும் என்றும், அவ்வாறு மூன்று நாட்கள் ஆகின்றபோது, ஒரு கூலி ஆளுக்கு மூன்று நாட்களுக்கு 1,500 ரூபாய் விதம், 30 ஆட்களுக்கு 40,000 ரூபாய் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் செலவு, மன உளைச்சல் என அனைத்து விதத்திலும் விவசாயிகள் பெரும் வேதனை அடைவது மட்டும் இல்லாமல், விவசாயத்திற்காக செலவு செய்த பணத்தைவிட, அறுவடைக்கு அதிக அளவு பணம் விரயம் செய்யும் நிலை உள்ளதால், கடன் தொகை, குடும்ப வருமானம், மாணவர்களின் எதிர்காலம் என எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று தோன்றுவதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் மறுகரையில் உள்ள விவசாயிகளின் நிலை அறிந்து, அறுவடை இயந்திரங்கள், விவசாய வாகனங்கள் செல்வதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்தினால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.