கோவை வெள்ளியங்கிரியில் மலை அடிவாரத்தில் குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வரும் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் அனுமதி தராதவரை எந்த பணியையும் தொடரக்கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆலங்குடி, களிமங்கலம் பகுதிகளில் தென்கரை, செரூர், செட்டிபாளையம், பச்சனவயல் கிராமங்களை சேர்த்து 4,710 வீடுகள் கட்ட தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து மலைவாழ் பழங்குடியின மக்களின் சமூக அமைப்பொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு இன்று மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் இந்த திட்டத்திற்கு நகர அமைப்புத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் பரிந்துரை மட்டுமே பெறப்பட்டுள்ளது. ஒப்புதல் வழங்கப்படவில்லை என அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார். அதேபோல் மனுதாரர் தரப்பு குறிப்பிடுகையில், அந்த மலைப்பகுதி அருகில் செயல்பட்ட இண்டஸ் எனும் கல்லூரி மூடப்பட்டது. மூடப்பட்ட அந்த கல்லூரிக்கு 100 மீட்டருக்கு அருகில்தான் இந்த 4,710 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக வாதாடினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மலை பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதல் பெறாதவரை வீடுகட்டும் திட்டப்பணிகளுக்கு தடை விதித்து வழக்கை செப்டம்பர் 18 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.