கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் கால்வாய் நீரில், கோழியூர் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நேற்று குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பொம்மை போன்று குழந்தை உருவம் ஒன்று தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. அதனை பொம்மை என நினைத்து சிறுவர்கள் அருகில் சென்று பார்த்தபோது தொப்புள் கொடியுடன் கூடிய இறந்துபோன பெண் குழந்தை என்பது தெரிய வந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாகத் திட்டக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து தண்ணீரில் மிதந்து வந்த பெண் சிசுவை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டனர். அந்த சிசுவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும், தண்ணீரில் மிதந்து வந்த பச்சிளம் சிசுவின் உடல் இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தையின் உடல் என்பதால் சிசுவைக் கொல்லும் எண்ணத்தில் வாய்க்கால் தண்ணீரில் யாருக்கும் தெரியாமல் வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பாசன வாய்க்கால் தண்ணீரில் பச்சிளம் பெண் சிசுவை வீசிச் சென்றது யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். பாசன வாய்க்காலில் பெண் சிசு மிதந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.