தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 66,130 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மைப் காவலர்களாக பணி செய்கின்றனர். இவர்களது ஊதியத்தை மாதம் 2,600 ரூபாயிலிருந்து 3,600 ரூபாயாகவும் டேங்க் ஆப்பரேட்டர் ஊதியம் 2,600 ரூபாயிலிருந்து 4 ஆயிரமாகவும், உயர்த்தி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டும் இன்று வரை அந்த உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.
இதை அமல்படுத்தக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 28ந் தேதி புதன் கிழமையன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கம் அறிவிப்பு செய்திருந்தது. இதை கைவிடக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ கவிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் 28ந் தேதி திட்டமிட்டபடி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யூ.சி மாநில தலைவரும், திருப்பூர் எம்பியுமான சுப்பராயன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. சங்கத்தின் துணை தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். இதில் ஈரோடு ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி, திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் சுப்பு, குணசேகரன் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். முன்னதாக திருப்பூர் சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 527 ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது ஒரு நாள் சம்பளம் 83 ரூபாய்தான். இதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். இந்த 83 ரூபாய்யை வைத்து அமைச்சர்களால் ஒரு நாளை சமாளிக்க முடியுமா? தூய்மை பாதுகாவலர்கள் சுடுகாட்டு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். நமது ஈரோடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் பணி புரிகின்றனர். தமிழக சட்டசபையில் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தி அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்னவாச்சு. உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் இதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.