திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் அரசு அலுவலர்களுக்கு என்று கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலர்கள் மன்றம் ஒன்று உள்ளது. அதற்கான அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டு அங்கு அது செயல்பட்டு வருகிறது.
இதில் அரசு அலுவலர்கள் என்ற போர்வையில் தினம் தினம் மது குடிப்பது, சீட்டு விளையாடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதைப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கவனத்துக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் மார்ச் 22ந் தேதி நகரை வலம் வந்தபோது அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், ஆபிஸர்ஸ் மன்ற அறைக்குள் நுழைந்து பார்த்தபோது அங்கு குடித்துக்கொண்டுயிருந்த சிலர் தப்பி ஓடியுள்ளனர். அந்த அலுவலக கட்டிடத்தில் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக சீட்டுக்கட்டு மற்றும் மது பாட்டில்களும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அந்த அலுவலக கட்டிடத்திற்கு சீல் வைக்க வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆபீஸர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்தார். மேலும அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் சீட்டுகளை பறிமுதல் செய்தார். இச்சம்பவம் திருப்பத்தூர் மாவட்ட அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.