Skip to main content

கரோனா பீதியில் சேலம் அரசு மருத்துவர்கள்! ஜி.ஹெச். பணியாளர்கள் 6 பேருக்கு நோய்த்தொற்று!!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

SALEM GOVERNMENT HOSPITAL DOCTORS, WORKERS CORONAVIRUS PEOPLES


சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் மூலம் தங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்குமோ என மற்ற மருத்துவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். 

 

சேலம் மாவட்டத்தில், நேற்று (ஜூலை 7- ஆம் தேதி) வரை மொத்தம் 1340 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களைப் பரிசோதனை செய்ததில் மட்டும் இதுவரை 301 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று வரை சேலம் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் என மொத்தம் 869 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

செவ்வாய்க்கிழமை அன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நோய் குணமடைந்த 52 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த ஐந்து பேருக்கும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, இருதய நோய் என வேறு சில நோய்களின் தாக்கமும் இருந்தது. 

 

கரோனா நோயாளிகளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'மெடிக்கல் பிளாக்' கட்டடத்தில் நான்கு தளமும் கரோனா வார்டாக மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் படுக்கை வசதிக்காக தரை தளத்தில் இருந்த மருத்துவமனை முதல்வர் அலுவலகமும் பி.எம்.எஸ்.எஸ்.ஒய் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. 

 

கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு முதல் 7 நாள்களுக்கு கரோனா வார்டில் பணி ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது ஏழு நாள்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த இரு சுழற்சியின்போதும் அவர்கள் எக்காரணம் கொண்டு வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடையாது. மூன்றாவது ஏழு நாள்கள், கரோனா தவிர்த்த பிற மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு சுழற்சி முறையில் மருத்துவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பும் மருத்துவர்களுக்கு அப்போதும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

 

துறைத்தலைவர்களுக்கு வழக்கம்போல் நிர்வாகப் பணிகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. உதவி / இணை பேராசிரியர் அந்தஸ்திலான மருத்துவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மட்டுமே கரோனா பணி ஒதுக்கப்படுகிறது. கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு சேலம் குரங்குசாவடி அருகே உள்ள ஜி.ஆர்.டி. மற்றும் ராமகிருஷ்ணா காந்தி சாலையில் உள்ள விண்சர் கேஸில் ஆகிய தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்திக் (குவாரண்டைன்) கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவாரி உணவகத்தில் இருந்து உணவுப் பொருள்கள் தருவித்து வழங்கப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியில் இருந்த 6 மருத்துவமனைப் பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது, ஒட்டுமொத்த அரசு மருத்துவமனை வட்டாரத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொற்று கண்டறியப்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் மட்டுமின்றி, அதே காலக்கட்டத்தில் கரோனா வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இது, மற்ற மருத்துவர்களிடையே உள்ளூர ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

http://onelink.to/nknapp

 

''சென்னையில் எம்.எம்.சி., ராஜிவ்காந்தி, ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் மருத்துவமனை பணியாளர்களுக்குதான் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர்தான் மருத்துவர்களுக்கும் தொற்று உறுதியானது. 20- க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மூன்று அரசு மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 

கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர் மற்றும் இதர பணியாளர்களுக்கு மட்டுமின்றி கரோனா தவிர்த்த வழக்கமான மருத்துவப் பணிகளில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்கள், இதர பணியாளர்களுக்கும் என்- 95 மாஸ்க் மற்றும் பேஸ் ஷீல்டு வழங்க வேண்டும். அதேபோல், சேலம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே அரசு மருத்துவமனைகளில் இப்போதுவரை கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு உடல்நலப் பிரச்னைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் சளி தடவல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

 

இன்றைய நிலையில் மருத்துவமனைக்கு வரக்கூடிய எல்லோரையுமே நாம் கரோனா பாசிட்டிவ் உள்ளவர் போல கருதி அதற்குரிய பரிசோதனைகளைச் செய்தால்தான் நோய்த்தடுப்புப் பணிகளை இன்னும் வேகமாகச் செய்ய முடியும்,'' என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

 

ஒரு சிறு கவனக்குறைவும் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடக்கூடும் அபாயம் இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமின்றி, தமிழக அரசும் கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

 


 

சார்ந்த செய்திகள்