Skip to main content

கொலை வழக்கு ஆயுள் கைதிகள் விடுதலை விவகாரம்!- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், கோவை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ஆயிரம் ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவெடுத்து தமிழக அரசு, 2018 பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தது. கொலை வழக்குகளில் ஆயுள் கைதிகளாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்திவேல் உள்ளிட்ட ஐந்து பேரை, தமிழக அரசாணையின்படி விடுவிக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

chennai high court prisoners release issues govt officers

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களை முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ஆயுள் கைதிகளின் பெற்றோர் காளியம்மாள், ஆசியா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார், கோவை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
 

இந்த வழக்குகள் முன்பு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என பல முறை அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 21- ஆம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, ஐந்து பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்குகள் 25- ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போதும், விசாரணையை தள்ளிவைக்கும்படி அரசுத்தரப்பில் கோரப்பட்டதை அடுத்து, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, கூடுதல் டி.ஜி.பி., ஆபாஷ்குமார், கோவை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். நேரில் ஆஜராகாமல் இருக்க உச்சநீதிமன்றத்தை அணுகி தகுந்த உத்தரவை பெற்றுக் கொள்ளலாம் எனவும், இல்லாவிட்டால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்