காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தனியார் ஆலையில் ஐந்து பெண்கள் உள்பட 9 பேர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் ஆலையில், திடீர் வெடிவிபத்து ஏற்பட்டத்தில் கட்டடம் முழுவதும் தரைமட்டமானது. இந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறிய நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்க்ளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெடி விபத்து நிகழ்ந்த கட்டடத்தில், திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாகவும், வெடிவிபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.