![cuddalore district coronavirus NLC employees](http://image.nakkheeran.in/cdn/farfuture/m5vaCSxUKudoPx1YxnZLRfLUji8FLx-rYxJlu_Omseg/1589268453/sites/default/files/inline-images/nlc3222.jpg)
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் இன்கோசர்வ் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இவர்களில் 50% தொழிலாளர்களுக்கு நிர்வாகம் விடுப்பு அளித்து சுழற்சிமுறையில் பணிபுரிய தொழிலாளர்களுக்கு அனுமதியளித்தது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு சரியாக அமல்படுத்தவில்லை. ஒரு சில பகுதியில் 26 நாட்களுக்கான ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி என்.எல்.சி. முதலாவது சுரங்கம் மற்றும் விரிவாக்கத்தில் (1A) பணியாற்றும் சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று (12/05/2020) காலை திடீர் தர்ணா மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 03.00 மணி நேரம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர்.
பின்னர் தகவலறிந்து அங்கு வந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் 26 ஷிப்டுக்கு சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியை ஏற்று தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் பணிக்குத் திரும்பினர்.