கரோனோ நோய் பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மே-17ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கரோனோ நோய் தொற்றின் பரவல் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்புவரை, கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக புதிய நோய் தொற்றுகள் ஏதுமில்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காவல்துறையை சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மாவட்டத்தில் கரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை 395 லிருந்து 411 ஆக உயர்ந்தது.
கடலூரிலுள்ள காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 134 பெண் காவலர்கள் 4-ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் முன்னெச்சரிக்கை கருதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பெண் காவலர்கள் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அங்கு பயிற்சி கொடுத்த காவல்துறை அதிகாரிகள் ஓர் உதவி ஆய்வாளருக்கும், இரண்டு தலைமை காவலர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அதையடுத்து அவர்கள் 13 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
“கரோனா தொற்று தொடர்பாக எந்தவிதமான அறிகுறியும் ஏற்கனவே இல்லாத நிலையில், 13 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியானதால் பயிற்சியில் உள்ள மற்ற 124 பெண் காவலர்களும் பயிற்சி மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து பயிற்சிகள் நடைபெறாமலும் நிறுத்தப்பட்டுள்ளது” என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், 87 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 79 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், 84 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 30 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், 18 பேர் திட்டக்குடி அரசு மருத்துவமனையிலும் 7 பேர் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையிலும் தனி வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3074 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 7956 பேரின் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 411 பேருக்கு கரோனா இருப்பதும், 7126 பேருக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 420 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.