
சுருக்குமடி வலையை தடைசெய்ய வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை மற்றும் அதிவேக படகுகளை தடை செய்யக்கோரி கடந்த 8 நாட்களாக பல்வேறு கட்டங்களாக போராடி வந்தனர். சுருக்குமடி வலைக்கு ஆதரவு வேண்டி பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் எதிர்தரப்பாக போராடி வந்தார்கள். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரு தரப்பு மீனவர்களிடையே உச்சகட்ட மோதல்போக்கு உருவானது. இந்த சம்பவத்தில் ஒரு படகு உடைத்து நொறுக்கப்பட்டது. இதில் 6 மீனவர்கள் கடலில் குதித்து உயிர்தப்பினர். இதில் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய அந்த விசைப்படகு அரசால் கடந்த 20ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அந்த படகில் இருந்த சுருக்குமடி வலையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் மீனவர்கள் தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், நேற்று அவை வாபஸ் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இனிமேல் தடை செய்யப்பட்ட படகுகளையும், வலைகளையும் பயன்படுத்த முடியாது. அப்படி நடந்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று 20 கிராமத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 ஆயிரம் மீனவர்கள் எட்டு நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.