வருகிற 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக, ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழாவைப் பொதுவெளியில் கொண்டாடக்கூடாது என்றும், அவரவர் வீட்டிலேயே கொண்டாடிக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றமும், அரசும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர்கள் பாஸ்கர், விஜயரங்கன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வினோத் ஆகியோர் தலைமையில் ஏராளமான பா.ஜ.கவினர் நேற்று முன்தினம் (17.08.2020) 'விநாயகர் சதுர்த்தியை'யொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு விதித்துள்ள தடையை விலக்க வேண்டும், சமூக இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகாமூரியிடம் மனு அளித்தனர்.
அதையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கும் வகையில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகாமூரி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், சார் ஆட்சியர்கள் பிரவீன்குமார், விசு மகாஜன் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சந்திரசேகர் சாகாமூரி கரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவது, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது உள்ளிட்டவற்றை தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
சிறிய கோயில்களில் பொதுமக்கள் வழிபட ஏற்கனவே அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய கோயில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.