சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பாரதீய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக பட்ஜெட்டினை வரவேற்போம். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு பழக்கம் உள்ளது. சட்டமன்றத்துக்கு போனால் ஒன்று கிழிந்த சட்டையா இருக்கணும்.. இல்லையென்றால் கருப்பு சட்டையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் எதிர்க்கட்சியாக அவர் செயல்படவில்லை.
இன்றைய சூழ்நிலையில் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்கள் அதிக அளவில் பயனடைந்துள்ளன என்பதுதான் நிதி அமைச்சரின் கருத்து. இன்று பருப்பு வியாபாரிகள் பலன் அடைந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. குறித்து அடிப்படை தெரியாமல் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. இதையெல்லாம் தமிழக மக்களுக்கு பா.ஜனதா எடுத்து சொல்லும். மழைநீர் சேகரிப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக பட்ஜெட்டில் எல்லாத்துறைகளிலும் கவனம் செலுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவேண்டும். பட்ஜெட் குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஓட்டைப்பானையில் சமையல் செய்துள்ளதாக கூறியுள்ளார். பானையை ஓட்டை ஆக்கியதில் தி.மு.க.விற்கும் பங்குண்டு. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சில ஆயிரம் கோடி கடன் இருந்தது. தற்போது 3½ லட்சம் கோடி கடனை தாண்டி உள்ளது என்றால் அதில் தி.மு.க., அ.தி.மு.க. இருவருக்குமே முக்கிய பங்கு உள்ளது. அந்த ஓட்டை பானையை மாற்ற பா.ஜனதாவால் தான் முடியும் என்றார்.