திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் கவிதா என்பவர் ஒரு ஃபேன்சி கடையை நடத்தி வருகிறார். இவரது கணவர், வேலூர் சாலையில் மருந்தகம் நடத்திவருகிறார். அவலூர்பேட்டை சாலையில் உள்ள பேன்சி ஸ்டோரில், கருக்கலைப்பு நடந்து வருகிறது என இவரிடம் கருக்கலைப்பு செய்த பெண்ணிடமிருந்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் இதுபற்றி மருத்துவத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி மே 28ந் தேதி இரவு திடீரென அந்த ஃபேன்சி ஸ்டோருக்கு சென்ற அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அந்த பேன்சி கடையின் பின் பகுதியில், சட்டவிரோதமாக கரு கலைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள், மருந்துகள், ஸ்கேன் செய்யும் கருவி மேலும் கருக்கலைப்பு செய்வதற்காக படுக்கை முதலியவை அங்கு இருப்பதை கண்டு அவற்றை எல்லாம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கடையை வாடகைக்கு எடுத்து ஃபேன்சி ஸ்டோர் என்கிற பெயரில் கரு கலைப்பு சென்டர் சட்டவிரோதமாக நடத்திய கவிதா என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
கவிதாவுக்கு துணையாக மருந்துகடை வைத்துக்கொண்டு கருக்கலைப்புக்கு உதவி வந்த அப்பெண்ணின் கணவர் பிரபு என்பவரையும் கைது செய்தனர். பின்னர் அந்த இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர், அவர்கள் முன்னிலையில் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, கவிதா என்ற இந்த பெண் பத்து வருடங்களாக இந்த தொழிலை செய்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண் பத்தாவது வரை தான் படித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று பேர் என்ற கணக்கில் வைத்துக் கொண்டாலும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு இந்த பெண் கருக்கலைப்பு செய்துள்ளார். இவர் மீது கடுமையான சட்டத்தின் படி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கவிதாவின் கணவர் ஏற்கனவே பலமுறை மருத்துக்கடை வைத்துக்கொண்டு போலியாக மருத்துவம் பார்த்து, ஊசி போட்டதாக பல முறை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.