உலகம் அமைதி பெற வேண்டி நீதி கேட்டு தனிநபர் ஒருவராக கடும் முயற்சி மேற்கொண்டு பாத யாத்திரை மற்றும் ரத யாத்திரைபயணத்தை திருநெல்வேலி மாவட்டத்தின் தொடங்கி 15 மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(63). தற்போது சிவலோகநாதர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு உள்ளார். சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் சிவ வழிபாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். சிவனடியார்களுக்கு உதவுவது, கோவில் வழிபாட்டில் கலந்து கொள்வது, கோவிலை தூய்மைப்படுத்துவது, அன்னதானம் செய்வது இப்படி பல்வேறு பரிமாணங்களில் இவரது வாழ்க்கைப் பயணம் சென்றுகொண்டிருந்த வேலையில் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் இறந்த சம்பவம் இவரை மிகவும் பாதித்தது.
மேலும் இயற்கை சீற்றத்தால் சுனாமி, கடும் புயல், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள், மழை குறைந்து விவசாயதில் பாதிப்பு ஏற்பட்டு நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது இவரது மனதை வெகுவாக பாதிக்க செய்து யோசிக்க வைத்தது. இவைகள் தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு ஓர் முடிவுக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த இவர் கடந்த சித்ரா பௌர்ணமி அன்று முதல் மௌன விரதத்தைக் கடைப்பிடித்துவருகிறார். அன்று முதல் இன்று வரை யாரிடமும் எதையும் பேசுவதில்லை. சைகை மூலமே விளக்குகிறார். அவை புரியாத பட்சத்தில் ஒரு பேப்பரில் பேனாவால் எழுதிக் கொடுத்து விளக்குகிறார். சிவனடியார்கள் கொடுக்கின்ற உணவே இவரை பசியார செய்கிறது. கோவிலில் இருக்கும் இடத்தில் தூங்குகிறார். ஏரி குளங்களில் குளித்து விட்டு பின்பு பூஜையை துவங்குவது இவரது வாழ்க்கை பயணமாக மாறியுள்ளது.
இவரது மௌனவிரதம் தொடங்கி 175 ஆவது நாளன்று இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி என்னும் கிராமத்தில் உள்ள இந்து மகா சமுத்திர கடற்கரையிலிருந்து அனைத்து உலக ஆண்டவரிடம் நீதி கேட்டு நெடும் பயண பாத யாத்திரை மற்றும் ரத யாத்திரையை தொடங்கி தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்கள் வழியாக வங்காள விரிகுடா கடற்கரை வரை மௌனமாக சென்று ஆன்மீக யாத்திரையை அமைதியாக நடத்த முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அனுமதி வேண்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாளாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முயற்சிக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள சிவனடியார்கள் தொடர்பு கொண்டு பாத யாத்திரை மற்றும் ரத யாத்திரையில் ஆங்காங்கே கலந்து கொள்கின்றனர்.
பின்னர் இது பற்றி அவரிடம் கேட்டபோது "உலகில் நடக்கும் பேரழிவுகளும் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டி அனைத்து உலக கடவுள்களிடம் நீதி கேட்டு மவுன விரதத்தை கடைப்பிடித்து வருகின்றேன். 175 ஆவது நாள் அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பாதயாத்திரை மற்றும் ரத யாத்திரை தொடங்க உள்ளேன். எனது விண்ணப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வரை நான் பேசுவதில்லை என முடிவு செய்துள்ளேன். அதுவரை கைவிடப் போவதில்லை" என்று என எழுத்து மூலம் தெரிவித்தார்".
இவரது கடும் முயற்சிக்கு ஆங்காங்கே பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.