கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல நாட்கள் 100 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதில் பொதுமக்கள் மற்றும் வயது முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்கள் பகல்நேர வெயில் நேரத்தில் வெளியே வருவதற்கு சிரமம் அடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் புதன்கிழமை திடீரென மேகமூட்டத்துடன் வானிலை இருந்து காற்று மழையுடன் கோடை மழை பெய்தது. இதில் சிதம்பரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் (59) என்ற விவசாயி அவரது இருசக்கர வாகனத்தில் கோடை மழையின் தாக்கத்தை ரசித்தவாறு நனைந்து கொண்டே அவரது சொந்த ஊரான பின்னத்தூருக்கு சென்றுள்ளார்.
இவரது ஊருக்கு முகப்பில் இருந்த தென்னை மரம் கோடை மழையின் காற்றால் திடீரென சாய்ந்தது. இதில் எதிர்பாராத விதமாக இவரது இரு சக்கர வாகனத்தின் மீது தென்னை மரம் விழுந்ததால் உதயகுமார் சம்பவ இடத்தில் மூளை சிதறிக் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலே இறந்துள்ளார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து கிள்ளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.