உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் வரும் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. பலரிடம் பணம் இருந்தும், முகக்கவசம் கிடைக்காததால் அதனை அணிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகள் சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி ராகினி ஸ்ரீ, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதைத் தொடர்ந்து 100- க்கும் மேற்பட்ட முகக்கவசத்தை அவரே வீட்டில் தைத்து, அவர் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு, வீடாகச் சென்று வழங்கி வருகிறார். இது அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து மாணவி ராகினிஸ்ரீ கூறுகையில், "தற்போது கரோனா வைரஸால் எங்களுக்குப் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. அப்போது டிவி பார்க்கும்போது முகக்கவசம் தட்டுப்பாடு என்பதை அனைவரும் டிவியில் கூறுவதைப் பார்த்தேன். அதன்பிறகு அம்மாவின் ஆலோசனையின்படி நானே உட்கார்ந்து 100- க்கும் மேற்பட்ட முகக்கவசத்தைத் தைத்து எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு கொடுத்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென்று கூறி கொடுத்து வருகிறேன்" என்கிறார்.