கொண்டாட்ட மனநிலையில் இருப்பவர்களை சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனம். ஆனாலும், சட்டம் தன் கடமையைச் செய்ததாகக் கணக்கு காட்டியிருக்கிறது.
தீபாவளி நாளில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக மதுரை மாவட்டத்தில் மட்டும் 62 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். தல்லாகுளத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் போலீசாரிடம் “என்னங்கய்யா இது நியாயம்? காலம் காலமா பட்டாசு வெடித்துத்தானே தீபாவளி கொண்டாடுகிறோம்? அந்த நேரத்துல வெடிக்கணும்; இந்த அநேரத்துல வெடிக்கணும்னு இது என்னய்யா புதுசு புதுசா ரூல்ஸ் பேசுறீங்க?” என்று எகிற, காவல்துறையினரை பணியாற்ற விடாமல் தடுத்ததாக, அவர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பேரையூரை அடுத்துள்ள சத்திரப்பட்டியில் 67 வயது முதியவரான ராசுவும் கூட விதிமீறலாக பட்டாசு வெடித்த வழக்கில் கைதாகியிருக்கிறார்.
பட்டாசு வெடித்த வழக்கில் கைதானவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டது, பட்டாசு வெடித்து மதுரை – திருமங்கலம் பகுதிகளில் 32 பேர் காயம் அடைந்ததெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். எந்த உத்தரவையும் மதிக்காத போக்கு என்பது மக்களிடம் இருக்கவே செய்கிறது.
‘இங்கு குப்பை கொட்டாதீர்கள்! மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று அறிவிப்பு செய்திருந்தாலும், அந்த இடத்தில் குப்பை கொட்டி விடுகிறார்கள். சென்னையில் அருள்மிகு ஸ்ரீஎல்லையம்மன் திருக்கோவில் உள்ளது. அந்த கோவில் நிர்வாகம் ‘நாம் வணங்கும் தெய்வங்கள் அருள்பாலிக்கும் இடம். இங்கு குப்பையை கொட்டாதீர்கள். சுத்தமாக இருக்க ஒத்துழையுங்கள்.’ என்று தட்டி போர்டு வைத்து மக்களிடம் கெஞ்சுகிறது. ம்ஹும். ‘நீங்க என்ன சொல்லுறது? நாங்க என்ன கேட்கிறது?’ என்பதுபோல், அந்த இடத்திலும் குப்பை கொட்டவே செய்கின்றனர்.
இந்த விஷயத்தில் வேறென்ன சொல்ல முடியும்? எல்லாம் பழக்கதோஷம்தான்!