தமிழக முதல்வர் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கு வரும் என்று “உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ் அலுவலர்களுடன் அரசின் நலத்திட்டங்கள் சேவைகள் அரசு அலுவலகங்கள் மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் முதலாவதாக குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் அலுவலக செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 4 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, பக்கிரி சாமி நகரில் ரூ.142 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை, ரூ.20 லட்சம் செலவில் பூங்கா அமைக்கும் பணிகள், குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தின் செயல்பாடுகள், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவு குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் ஆடுர் அகரம் பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள், கீழ் பரவனாற்றில் என்எல்சி கனிம வள நிதியின் கீழ் ரூ 50 கோடி மதிப்பீட்டில் கொத்தவாச்சேரி முதல் கீழ்பூவானி குப்பம் வரை தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதே போல் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஆய்வுப் பணியில் மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.