உலகளவில் உடல்பருமனால் அவதிப்படுவோர் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ள துயரமான நிலையில், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் நொறுக்குத்தீனிகளை விற்கக்கூடாது என்று பல்கலை மானியக்குழு (யுஜிசி) அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மத்திய பல்கலைகள் 46, மாநில பல்கலைகள் 367, மாநில தனியார் பல்கலைகள் 263 உள்பட மொத்தம் 903 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் 1550 உறுப்புக்கல்லூரிகள் உள்பட 37977 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் நடப்பு 2017-2018ம் கல்வி ஆண்டில் 13 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பல்கலைகள், கல்லூரிகளில் உள்ள கேண்டீன்களில் பீட்ஸா, பர்கர், சமோசா மற்றும் பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய் பலகாரங்கள், குர்குர்ரே, பிங்கோ, சிப்ஸ் போன்ற கொரிக்கும் வகை நொறுக்குத் தீனிகள் விற்கப்படுகின்றன. பெரும்பாலும் தனியார் கல்வி நிலையங்களில் இவை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் விற்கப்படுகின்றன. கேண்டீன் நடத்த ஒப்பந்தம் விடுவதன் மூலம் கல்வி நிலையங்களுக்கு கணிசமான வருவாய் கிடைப்பதால், இத்தகைய தின்பண்டங்களை தாராளமாக அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், உலகளவில் உடல்பருமன் பிரச்னையால் அவதிப்படுவோர் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டில் ஆய்வுப்படி, 70 மில்லியன் பேருக்கு உடல்பருமன் தொந்தரவு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், 14.4 மில்லியன் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.
ஏனையோரில், கல்லூரி பருவ மாணவ, மாணவிகளும் உடல்பருமன் தொந்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மரபு ரீதியாகவும் இத்தகைய உடல்நலக்கோளாறுகள் ஏற்படலாம். என்றாலும் உணவுப்பழக்கம் மாற்றத்தால்தான் அதிகளவில் உடல்பருமன் பிரச்னையால் அவதிப்படுகின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல்பருமனால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பத்து வித பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையே, கல்விக்கூடங்களில் நொறுக்குத்தீனிகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்று யுஜிசிக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதை பரிசீலித்த யுஜிசி, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் நொறுக்குத்தீனிகளை விற்பதற்கு உடனடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், இதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாணவ, மாணவிகளின் உடல்நலன் சார்ந்த தரவுகளை சேகரிக்கவும், அனைவருக்கும் பிஎம்ஐ விவரங்கள், உயரம், இடுப்பு சுற்றளவு குறித்த விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊட்டச்சத்துணவு, மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
Published on 23/08/2018 | Edited on 27/08/2018