புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி காவல் சரகம் கரையப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன்-வீராயி தம்பதியின் மகன் மோகன் (வயது 34). பல வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து வந்தவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நம்பூரணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கர்ப்பிணியாக இருந்த பெண் அவரது தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
முதல் திருமண வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு உறவினர்கள் சம்மதத்துடன் வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த சென்பகவள்ளி (எ) கிருத்திகாவை முறைப்படி தாலி கட்டாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு படுக்கையில் கிடந்த குழந்தையை காணவில்லை என்று கத்தி கதறி கூச்சல் போட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தேடியபோது மாடி வீட்டின் மேல் உள்ள மூடி இருந்த தண்ணீர்த் தொட்டியை திறந்து பார்த்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை இறந்துவிட்டது என்று தெரிந்ததும் வீட்டிற்கு கொண்டுவந்தனர். தகவலறிந்து கே.புதுப்பட்டி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் மோகனின் முதல் மனைவி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடப்பதால் தற்போது குழந்தை பிறந்துள்ளது பற்றி நீதிமன்றத்திற்கு தெரிந்தால் மோகனுக்கு தண்டனை கிடைக்கும் என்று சொன்னதால் குழந்தையை கொன்று விடலாம். அதன் பிறகு வழக்கிலிருந்து தப்பிவிடலாம் என்று மோகன் சொன்னதால் நானும் என் கணவரை காப்பாற்ற ஒத்துக் கொண்டேன்.
வெள்ளிக்கிழமை என் மாமனார் மாமியார் இருவரும் அவங்க மகள் வீட்டுக்கு போனதும் குழந்தை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு பிறகு நான் தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டு குழந்தையை காணவில்லை என்று கதறினோம். இதில் மோகனின் முதல் மனைவியின் குடும்பத்தினர் தான் குழந்தையை கடத்திவிட்டதாக போகும் என்று நினைத்தோம். ஆனால் நாங்களே தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தை உடலை எடுத்தது அனைவருக்கும் சந்தேகம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
இந்த வாக்குமூலத்தையடுத்து குழந்தையின் தாய் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். பெற்ற குழந்தையை கொல்லும் அளவுக்கு கொடூர எண்ணம் கொண்ட பெற்றோரை உறவினர்களே வசைபாடி வருகின்றனர்.