திருப்பரங்குன்றத்தில் அமமுகவின் தங்கத்தமிழ்ச்செல்வன், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட அமமுகவினர் அத்தொகுதியில் பிரச்சாரத்திற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த விடுதியில் திடீரென்று சோதனை நடைபெற்றது. இதுகுறித்து அமமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம். அதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “சோதனை நடைபெற்ற அன்று நாங்கள் பிரச்சாரத்திற்காக கிளம்பிக்கொண்டிருந்தோம் திடீரென போலீஸ் பட்டாளமே வந்து சோதனை செய்யவேண்டும் என்றும் மேலிடத்து உத்தரவு என்றும் சொன்னது. நமக்குத்தான் தெரியுமே மேலிடம் என்றால் ஆளும்கட்சி என்று. ஆளும் கட்சி போலீஸின் துணையோடு பண விநியோகம் செய்கிறது. நாங்கள் வெறும் பிரச்சாரம் மட்டுமே செய்கிறோம் ஆனால் எங்கள் மீது சோதனை நடத்தப்படுகிறது. அதிகாரம் மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் இருந்தால் அதனை எவ்வாறு எல்லாம் துஷ்ப்பிரயோகம் செய்யும் என்பதற்கு தற்போது உள்ள ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர்களே எடுத்துகாட்டு.
அதேபோல் அரவக்குறிச்சியில் நடிகர் செந்திலும் ரஞ்சித்தும் பிரச்சாரத்தில் ஈடுபடவிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த விடுதியில் தான் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தங்கியிருந்தார். பன்னீர்செல்வம் தங்கியிருந்தார் என்று அவர்களை 6 மணியளவிலும் கூட அறைவிட்டு வெளியே வரவிடவில்லை. பன்னீர்செல்வம் கிளம்பியப்பின் தான் கிளம்பவேண்டும் என்றும் விடுதியில் இருந்த யாரையும் வெளியேவிடவில்லை. இவர்கள் எல்லாம் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார்கள்.”
தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாலமுருகவேல், முதலமைச்சரை டிடிவி தினகரன் ஒருமையில் பேசுகிறார். உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புகிறார். பல்வேறு விவகாரங்களை கொண்ட நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கிறார். ஆம்புலேன்ஸ்க்கு வழிவிடாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறார். அதனால் தேர்தல் நடத்தைவிதிகளின் படி அவர்மீது நடவடிக்கை எடுத்து அவர் பிர்ச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளாரே?
“ஜெயலலிதா இறந்ததும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா அல்லது சசிகலா குடும்பம் வேண்டாம் என்று தள்ளிவிட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதலமைச்சரானாரா? ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி’ என்று பாலமுருகவேல் சொல்கிறாரே அந்த முதலமைச்சர் எனும் அடையாள மொழி கூவத்தூரில் எப்படி வந்தது. நாங்கள் என்ன சொல்வது அவர் காலில் விழுந்ததை இந்த உலகமே பார்த்ததே. எடப்பாடி பழனிசாமி எப்படி முட்டிபோட்டு எழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கினார் என்பதை இந்த உலகமே பார்த்தது. தற்போது இருக்கும் இந்த தேர்தல் ஆணையம் கடந்த இரண்டு வருடங்களாக நடுநிலையாக இருக்கிறதா? மதுரையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தினுள் ஒரு அதிகாரி எப்படி செல்கிறார். முதலமைச்சருக்கே செல்ல அனுமதி கிடையாது. இதற்கு இன்னும் ஏன் தேர்தல் ஆணையம் சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை. அன்று சூலூரில் துணை முதல்வர் வாகனத்தின் பின்னும் முதல்வர் வாகனத்தின் பின்னும் நூறு வாகனங்கள் செல்கிறது. தேர்தல் என்று வந்துவிட்டால் முதல்வர், துணைமுதல்வர் எல்லாம் சட்டத்திற்கு முன் ஒன்றுதான். எனக்கு அதிமுகவில் 16 வருட அனுபவம் உள்ளது. இவர்கள் எல்லாம் யாரால் பதவிக்கு வந்தார்கள் என்பது எனக்கு தெரியும். தேமுதிகவில் இருந்து நேற்று வந்த பாலமுருகவேலுக்கு தெரியாமல் இருக்கலாம். மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜனரேடர் இல்லை. அதனால் ஐந்து அப்பாவி உயிர்கள் இறந்துள்ளது. முதலில் இதற்கு பதில் சொல்லட்டும்”.