கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும், வெள்ள நீருடன் முதலைகள் அடித்து வந்துள்ளது. இந்த முதலைகள் கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு தெரு பகுதியில் உள்ள தண்ணீர் குட்டையில் தங்கியுள்ளது.
முதலைகள் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதனைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த தலை பிடிக்கும் நந்திமங்கலம் ராஜ் குழுவினர் மற்றும் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் சிவச்சந்திரன், வனக்காப்பாளர் ஆறுமுகம், தோட்ட காப்பாளர் புஷ்பராஜ், ஸ்டாலின், செந்தில் ஆகியோர் தண்ணீர் குட்டையிலுள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, பின்பு முதலையைப் பிடித்து வக்காராமாரி குளத்தில் விட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.