Skip to main content

மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் போராட்டம்-ப.சிதம்பரம் பேச்சு

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி.க்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் பேருந்து நிலையம் அருகில் விழா பொதுமேடையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் உள்பட கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசும் போது.. 

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு என்பதை காட்டிவிட்டார்கள். அதற்காக அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்றாலும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தம் எல்லோருக்கும் உள்ளது. அந்த வருத்தத்தில் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் பதவி விலக கூடாது என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம், அவர்  பதவி விலகும் முடிவை கைவிடுவார் என நம்புகிறோம். 

pudukottai


மத்தியில் தற்போது ஒரு முரட்டு அரசாங்கம் அமைந்துள்ளது. அவர்கள் செயலில் பணிவோ கனிவோ இல்லை. பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இந்தியை திணிக்க நினைத்தார்கள். அனைவரின் எதிர்ப்பிற்கு பின் மும்மொழி பாடத்திட்டத்தை தினிக்க நினைத்த போது தமிழகம் எச்சரித்தது. அதன் பின்பு அந்த கொள்கையை மாற்றி எழுதினார்கள். ஆனால் அதில் குளறுபடிகள் உள்ளன. மத்திய அரசு இந்தியையோ, மும்மொழி கொள்கையோ இன்னும் விட்டு விடவில்லை. தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி பேசுவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

ரயில் நிலையங்களில் இந்தியில் தான் பேச வேண்டும் என்று சொன்னார்கள். போராட்டம் என்று அறிவித்ததும் வாபஸ் பெற்றார்கள். இந்த 30 நாளில் அவர்கள் செய்தது அறிவிப்பும் வாபசும் தான். நீட் தேர்வு கடந்த ஆண்டு 2 மாணவர்களும், இந்த ஆண்டு 5 மாணவர்களை பலியானார்கள். தமிழர்கள் வரிப்பணத்தில் தமிழ்நாட்டில் கட்டபடும் மருத்துவ கல்லூரிகளில் தமிழர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை. அவர்களுக்கு வேண்டுமானால் 10 சதவீதம் இடங்களை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழ்நாட்டு கல்லூரிகளில் ஒதுக்கும் இடத்தை பிடிக்க நினைக்க கூடாது.  நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காது.

கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை கோடி தென்னை மரங்கள் விழுந்துள்ளது. ஒரு கோடி மரங்களுக்கு மேல் சேதமடைந்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 15 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு ஆயிரத்தி 146 கோடிகளை மட்டும் கொடுத்திருக்கிறது. இது இடைக்கால நிதி பட்ஜெட்டில் மற்ற நிதி கிடைக்கும் என்றார்கள். ஜுலை 5 ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசு கேட்ட கஜா புயல் பாதிப்பிற்காண முழு நிவாரண நிதியையும் ஒதுக்காவிட்டால் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கு மக்களும் தயாராக வேண்டும்.

பீகார் மாநிலத்தில் 140 குழந்தைகள் மூளை வீக்க காய்ச்சலில் இறந்துள்ளது. அங்கே 23 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களே இல்லை. அங்குள்ள சிறப்பு மருத்துவமனையில் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் எந்த வசதியும் இல்லை என்பதை ஆய்வு அறிக்கைகள் சொல்கிறது. இறந்த குழந்தைகள் முதல் நாள் இரவில் உணவு கிடைக்காமல் பட்டினியால் லிச்சிப் பழம் சாப்பிட்டதால் அதிலிருந்த கிருமிகள் தான் குழந்தைகளை பாதித்துள்ளது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதில் 80 சதவீதம் குழந்தைகளின் பெற்றோர் மாதம் வருமானம் ரூ. 6 ஆயிரம் கூட இல்லாதவர்கள் என்பது தான் வேதனை. இந்த நாட்டில் ஏழ்மை ஒழிந்து விட்டதா என்றால் இல்லை. 

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. எனினும் வருங்காலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றார். 

 

 

pudukottai


தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம் எம்.பி…  தமிழகத்தில் 37 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த கூட்டணி தான் காரணம். தமிழர்களை மதிக்கின்ற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். நாடாளுமன்றம் தொடங்கி 2 வாரங்கள் தான் ஆகிறது. ஆனால் மத்திய அரசின் செயல்பாடுகள் முரட்டுத்தனமாக உள்ளது. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டுவர  நினைக்கிறது. அதை ஒருபோதும் நான் உட்பட திமுக கூட்டணி எம்.பி. க்கள் விடமாட்டோம்.

குடிநீர் பிரச்சினை பற்றி ஆண்டுதோறும் நாம் விவாதிக்கிறோம். ஆனால் இதற்கான நிரந்தரத் திட்டங்களை நாம் வகுக்கவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கனவுத் திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டம். அதனை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். மேலும் ஜூலை 5 ந் தேதி பட்ஜெட்டில் கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்