சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துல் ரஷீத். இவரது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவர் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தபோது வீட்டு வாசலில் முதலையைப் பார்த்துள்ளார். முதலையைப் பார்த்து சத்தம் போட்டதால் உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் எழுந்து கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிதம்பரம் வனவர் பிரபு தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து முதலையைப் பத்திரமாக சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் விட்டனர். முதலையைப் பிடித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.