திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ஜெயராமன். இவர் இந்து முன்னணியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர், தனது மனைவி நாகராணி மற்றும் குழந்தைகள் தீப்திகா, கனிஷ்கா, போகன் ஆகியோருடன் செம்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டி கம்மாய் அருகே வசித்து வந்தார்.
புல்வெட்டி கம்மாய் அருகே உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின் கீழ்த்தளத்தில் 5 கடைகள் உள்ளன. 5 கடைகளிலும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் உள்ளன. கட்டடத்தின் மேல்தளத்தில் தனது குடும்பத்துடன் ஜெயராமன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஜெயராமனின் குழந்தைகள் மூவரும் வணிகம் வளாகம் முன்பு காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். மேலே ஜெயராமன், அவரது மனைவி நாகராணி மற்றும் பணியாட்கள் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. இதில் கட்டடத்தின் மூன்று தளங்களும் தரைமட்டமானது. கட்டடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களும் சேதமடைந்தன. கட்டடத்தின் கீழே பட்டாசுக்கடை முன்பு நின்று கொண்டிருந்த மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்து குறித்து அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன், காவல் ஆய்வாளர்கள் வெள்ளையப்பன், செந்தில்குமார் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததுடன் விரைந்து வந்து கட்டடத்தின் மேல்பகுதியில் தண்ணீரைப் பீச்சி அடித்து பட்டாசுகளை வெடிக்காமல் செய்துவிட்டு கட்டடத்தின் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கி இருந்த நபர்களை மீட்க முயன்றனர்.
உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின் கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு நான்கு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினார்கள். இச்சம்பவம் குறித்த தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து அப்பகுதியில் பொதுமக்களும் இளைஞர்களும் குவிந்தனர்.
இந்த விபத்தில் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் வெடி விபத்து ஏற்பட்டதா? அல்லது சிலிண்டரால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.