விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால், இன்றைக்குக் காலையில் உணவு சமைப்பதற்கான முன் தயாரிப்புகளைச் செய்வதற்காக நேற்று இரவு சமையல் செய்யும் பெண்கள் பள்ளிக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர்க் குழாயை எதார்த்தமாகத் திறந்தபோது, துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனைத் தொடர்ந்து குடிநீர்த் தொட்டியைப் பார்த்தபோது மாட்டின் சாணம் நீரில் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இது குறித்து சமையல் செய்யும் பெண்ணின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்திருப்பதை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர், யார் இந்த செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.