
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 52 வயதான வேலு. விவசாய வேலைகள் செய்யும் இவர், தங்களது பயன்பாட்டுக்காக ஒரு பசுமாட்டை வளர்த்துவருகிறார்.
கடந்த டிசம்பர் 10ஆம் தேதி மாலை அந்த பசு, கன்று பிரசவித்துள்ளது. அந்த கன்று பிறந்த 4 மணி நேரத்துக்குப் பின் எழுந்து நடக்க முயன்றுள்ளது, அப்போது அது தடுமாறி தடுமாறி சென்றதைப் பார்த்தவர் முதலில் நடக்கப் பழகுகிறது என நினைத்துள்ளார். பின்னர் தான் தெரியவந்தது அந்த கன்றுக்கு கண் இமை இருக்கிறது, ஆனால் கண்கள் இல்லை என்பது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.
இந்த தகவல் பரவி அக்கம் பக்கம் கிராம மக்கள் வந்து வேடிக்கை பார்க்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. கால்நடைத்துறை மருத்துவர்கள் அங்குவந்து அதனைப் பரிசோதனை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
மனிதர்கள் பிறக்கும்போதே பார்வையற்றவர்களாகப் பிறப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கன்றுக்குட்டி பிறக்கும்போதே கண்கள் இல்லாமல் பிறந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அந்தப்பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், கண்கள் இல்லாமல் கன்று பிறந்திருப்பது நாட்டுக்கு ஆபத்தானது. ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என வதந்தி பரவியுள்ளது. இதனால், அப்பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது.